gaza strip
gaza strip  file image
உலகம்

குண்டு மழை பொழியும் இஸ்ரேல்.. ஒட்டுமொத்தமாக சிதையும் காஸா; 2 லட்சம் வீடுகள் சேதம்!

யுவபுருஷ்

இஸ்ரேல் - காஸா இடையே நடந்து வரும் போரில், காஸா பகுதி மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதலையும், குண்டு மழையையும் பொழிந்து வருகிறது இஸ்ரேல். முதல்நாள் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1,400 பேர் பலியான நிலையில், ஹமாஸை முழுமையாக அழிப்போம் என்று சபதமெடுத்து காஸா மீது கோர தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல்

இன்றோடு 20 நாட்களை எட்டியுள்ள இந்த போரில், 7,000 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். சோகம் என்னவெனில் அதில் 3,000 பேர் அப்பாவி குழந்தைகள் மற்றும் சிறுவர்கள்.

இந்நிலையில், தற்போதுவரை நடந்துள்ள தாக்குதலில் மட்டும் காஸாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐநா வெளியிட்ட தகவலின்படி காஸாவில் சுமார் 45 சதவீதமான குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் தங்களது வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் 6 லட்சத்து 29 ஆயிரம் பேர் தற்காலிக குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளி வளாகங்கள், குடிநீர் மையங்கள், மார்க்கெட்டுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பாலஸ்தீன பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது சியாரா தெரிவித்துள்ளார்.

உருக்குலைந்த காசா நகரம்

இந்நிலையில், போருக்கு முன் மற்றும் போருக்கு பின் எடுக்கப்பட்ட காஸா நகரின் போட்டோக்கள் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.