உலகம்

அமெரிக்க அருங்காட்சியகத்தில் கிடைத்த 1000 ஆண்டுக்கு மேல் பழமையான சோழப் பேரரசியின் சிலை!

அமெரிக்க அருங்காட்சியகத்தில் கிடைத்த 1000 ஆண்டுக்கு மேல் பழமையான சோழப் பேரரசியின் சிலை!

webteam

1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழப் பேரரசி செம்பியன் மகாதேவியின் உலோக சிலை அமெரிக்கா அருங்காட்சியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் கைலாசநாதர் கோயிலில் உள்ள செம்பியன் மகாதேவியின் சிலை போலியானது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சோழப் பேரரசின் பேரரசர் கந்தராதித்ய சோழர், ஒன்பதாம் நூற்றாண்டு (கிபி 910) ஆட்சி புரிந்த, இவரது மனைவி பேரரசி செம்பியன் மகாதேவி. உத்தம சோழரின் தாயான செம்பியன் மகாதேவி கணவரின் மறைவுக்கு பின்பு சிவ தொண்டில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார்.

சோழப் பேரரசில் அதுவரை செங்கல் கட்டிடங்களால் கோயில்கள் கட்டப்பட்டு வந்த நிலையில், கருங்கற்களால் கோயில்களை கட்டத் தொடங்கியது செம்பியன் மகாதேவி தான். கோயில் கட்டுவது மற்றும் கலை கலாச்சாரத்துக்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார். கும்பகோணத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், பேரரசி செம்பியன் மகாதேவி, கருங்கற்களால் கட்டிய முதல் கோயில் ஸ்ரீ காந்த அகஸ்தீஸ்வரம் சிவன் கோயில்.

திருப்பணிகளில் ஈடுபட்ட செம்பியன் மகாதேவியின் மறைவிற்குப் பின்னர், நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் செம்பியன் மகாதேவி சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை கைலாசநாதர் கோயிலில் இருந்து 1958 ஆம் ஆண்டு திருடப்பட்டதாக யானை ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விசாரணையில் இறங்கிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அமெரிக்க நாட்டில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் Freer Gallary of Art மூன்றரை அடி உயரம் உள்ள செம்பியன் மகாதேவியின் சிலை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 1929 ஆம் ஆண்டு முன்னர் செம்பியன் மகாதேவியின் சிலை திருடப்பட்டது என்றும், தற்போது அந்த கோயிலில் வைக்கப்பட்டிருக்கக் கூடிய செம்பியன் மகாதேவி சிலையானது, போலியான சிலை என்றும், இந்த சிலை 1958 இல் இந்து அறநிலை துறை அதிகாரிகளால் வைக்கப்பட்ட 1 அடி சிலை என்பதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள செம்பியன் மகாதேவியின் சிலையை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர்.