செய்தியாளர் - கார்த்திகேயன்
இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றுதான் நேபாளம். காலநிலை மாற்றம் இந்தச் சீற்றங்களை அதிகப்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்த நாட்டில், கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு, ஒட்டுமொத்த உலகத்தையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தது. இமயமலையில் 50 ஏக்கர் பரப்பளவிலான பனிப்பாறை உருகி, 200 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த வெள்ளத்தில் சிக்கி, 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையே இன்னும் உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்ற அதிகமானோர், மாயமானார்கள். இந்தச் சம்பவத்தின் தழும்புகள்கூட இன்னும் மறையாத சூழலில், தற்போது இன்னொரு பெருவெள்ளம் ஏற்பட்டு, நேபாள நாட்டையே உலுக்கியுள்ளது. அதாவது, நோபளத்தின் கோர்கா மாவட்டத்தில், அக்டோபர் 11-ஆம் தேதி அன்று, மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் உருவான மிகப்பெரிய பாறைகள், புதிகண்டறி ஆற்றின் குறுக்கே விழுந்ததால், அதன் நீரோட்டம் பாதிக்கப்பட்டு, மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
லோக்பா மற்றும் சும்லிங் இடையேயான மலைப்பகுதியில் தேங்கியிருந்த லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர், அடைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறி, ஆற்றங்கரையோரம் இருந்த ஜகத், பயியு, சல்லேரி மற்றும் பாகர் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து, பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தால், 2 தொங்கு பாலங்களும், ஒரு இரும்பு மோட்டார் பாலமும், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஆற்றின் நீர் மட்டம் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில், நேபாள ராணுவத்தினர் மும்மரம் காட்டி வருகின்றனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், மலையேற்ற வீரர்களும், வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதுவரை 9 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 96 பேர் மட்டுமே அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். 3 நீர்மின் நிலையங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்திருந்த போதிலும், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.