உலகம்

’இன்னும் அந்த சீரியஸ்க்கு வரல’ - குரங்கு அம்மை பாதிப்பு குறித்து ’WHO’ விளக்கம்

ச. முத்துகிருஷ்ணன்

குரங்கு அம்மை பாதிப்பு சுகாதார அவசர நிலையை அறிவிக்கும் நிலையை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும் நோய் பரவலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை தொடர்ந்து உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது. 58 நாடுகளில் 3 ஆயிரத்து 400க்கும்அதிகமானோர் இதுவரை குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை இந்நோய் எளிதாக தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் உலக சுகாதார நிறுவனம் சார்பில் நடைபெற்றது. அதில், விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய உலக சுகாதார அமைப்பின் டெட்ரோஸ் அதானோம், குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசர நிலையை அடையவில்லை என்றும், அதே நேரத்தில் சுகாதார அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களை கண்காணித்தல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பரவலை தடுப்பதற்கும், சிகிச்சை மற்றும் தடுப்பூசி கிடைப்பதற்கும் ஒருங்கிணைத்த நடவடிக்கை தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.