உலகம்

ஆதரவற்ற பிஞ்சு வாத்துகளை உடனே அரவணைத்த தாய் வாத்து - நெகிழ்ச்சி வீடியோ..!

webteam

ஆதரவற்ற பிஞ்சு வாத்துகளை ஏரியில் விட்டதும் அங்கிருக்கும் ஒரு தாய் வாத்து அதனை உடனே அரவணைத்துக் கொண்ட காட்சிகள் நெகிழ வைத்துள்ளது.

ஒடிசாவில் பணிபுரியும் இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா. இவர் அவ்வப்போது தனது ட்விட்டரில் வனவிலங்குகள், உயிரினங்கள் தொடர்பான தகவல்களையும், நெகிழ்ச்சியான சம்பவங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பகுதியில் வனவிலங்கு பாதுகாப்பு பெண் அதிகாரி ஒருவர், ஒரு ஏரியில் 10 பிஞ்சு வாத்துகளை விடும் காட்சிகள் உள்ளன.

அந்த பிஞ்சு வாத்துகளை அங்கு நீந்திக் கொண்டிருந்த ஒரு தாய் வாத்து உடனே வந்து தத்தெடுத்துக் கொண்டது. அந்த தாய் வாத்துக்கு ஏற்கெனவே 9 குட்டி வாத்துகள் இருந்தபோதும், இந்த 10 பிஞ்சு வாத்துக்களையும் அரவணைத்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. முன்னதாக, அந்த 10 பிஞ்சு வாத்துகளும் தாய் வாத்து இன்றி சாலையை கடந்தபோது, மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாய் வாத்திடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என சுசந்தா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.