சீனாவில் ஜாங் சூ என்பவர், 40 கி.மீ நீளமான ஆபத்தான நதியில் மோட்டார் சைக்கிளை இயக்கி கிண்ணஸ் சாதனையை படைத்தார். தண்ணீரில் பைக்கை இயக்குவதற்கான சிக்கல்களை மாற்றியமைத்து, சறுக்கு பலகை மற்றும் முன்னோக்கு விசை போன்ற நுட்பங்களை பயன்படுத்தி சாதனை நிகழ்த்தினார்.
செய்தியாளர் - கார்த்திகேயன்
தண்ணீரில் பைக்கை இயக்கும்போது, இன்ஜினுக்குள் தண்ணீர் சென்று, இயக்கம் நின்றுவிடும். மேலும், பேட்டரி, வயரிங் போன்ற மின் பாகங்களில் தண்ணீர் படும்போது ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு இன்ஜினுக்குத் தேவையான மின்சாரம் தடைபடும். இதுமட்டுமின்றி, டயர்களுக்கு சாலைகளில் கிடைக்கக் கூடிய உராய்வு, தண்ணீரில் கிடைக்காததால், பைக்கால் நகர முடியாது. இவ்வாறு, தண்ணீரில் வழக்கமான பைக்கை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஆனால், அந்த சிக்கல்கள் அனைத்தையும் மாற்றி, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி இருக்கிறார் யாங் சூ என்ற நபர்.
அதாவது, சீனாவில் உள்ள தியான்ஜியாவான் பகுதியை சேர்ந்தவர் ஜாங் சூ. இவர், வளர்ந்து வரும் ZXMOTO என்ற மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சிறு வயது முதலே நீரில் மோட்டார் சைக்கிளை இயக்க வேண்டும் என்று ஆர்வம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தனது 22-வது வயதில், முதல்முறையாக நீரில் மோட்டார் வாகனத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர், வெறும் 20 மீட்டர்கள் மட்டுமே பைக்கை ஓட்டி, சாதனையை தவறவிட்டார். இருப்பினும் மனம் தளராக ஜாங் சூ, 17 ஆண்டுகளுககு பிறகு, மீண்டும் முயற்சி செய்து, தண்ணீரில் பைக் ஓட்டியுள்ளார். சீனாவின் மாயாங் மியாவ் பகுதியில் உள்ள நதி ஒன்றில், சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தை, பைக்கின் மூலம் கடந்துள்ளார். ஆபத்தான வளைவுகள் மற்றும் நீண்ட தூர நீர் வழித்தடங்களால் ஏற்பட்ட உடல் சோர்வையும் மீறி, அவர் வெற்றிகரமாக 6 சுற்றுகளை முடித்து இலக்கை அடைந்தார்.
இவரது இந்த சாதனை, கிண்ணஸ் உலக சாதனை அமைப்பால், அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பைக்கை தண்ணீரில் திறம்பட இயக்குவதற்கும், அது மூழ்காமல் இருப்பதற்கும், சக்கரங்களில் ஒரு பிரத்யேக சறுக்கு பலகை பொருத்தப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரை வேகமாக பின்னோக்கி தள்ளும் வகையில், பின்பக்க சக்கரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், மோட்டார் சைக்கிளுக்கு தேவையான முன்னோக்கு விசை கிடைத்து, வாகனம் வேகமாக தண்ணீரில் நகர்கிறது. இறுதியாக, தரைப்பகுதியில் பைக்கை அதிவேகமாக இயக்கி, அந்த வேகத்தின் மூலமாகவே தண்ணீரின் மீது வழுக்கிச் செல்லும் வகையில் அதன் நுட்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் மூலமாக தான், இது சாத்தியமாகியுள்ளது.