உலகம்

"கிம்மை சமீபத்தில் பார்க்கவில்லை.. வடகொரியாவை கவனித்து வருகிறோம்" அமெரிக்கா !

jagadeesh

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சமீபத்தில் பார்க்கவில்லை, இருப்பினும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இந்த மாத தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், அதன்பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் தொடர்ந்து உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தகைய தகவல்களை அண்டை நாடான தென்கொரியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சமீபத்தில் பார்க்கவில்லை என்றும் வடகொரியா அணு ஆயுத சோதனை மூலம் அச்சுறுத்தி வருவதால், அந்நாட்டின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனவும் மைக் பாம்பியோ கூறியுள்ளார். கிம் பற்றிக் கூற எந்த தகவலும் தங்களிடம் இல்லை என தெரிவித்த அவர், வடகொரியா கொரோனா வைரஸ் பாதிப்பு அல்லது பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு, உணவுபற்றாக்குறை ஏற்படும் ஆபத்தில் இருப்பதாக கூறினார்.

இதற்கிடையே, கிம் தங்கியிருப்பதாக கூறப்படும் கடற்கரைப் பகுதியில் அவரது சொகுசுப் படகுகளின் போக்குவரத்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.