தாய்லாந்தில் குகைக்குள் 12 மாணவர்கள் உள்பட 13 பேர் சிக்கித் தவித்த நிலையில் 9 நாட்களுக்கு பின் அவர்கள் உயிருடன் பத்திரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு தாய்லாந்தில் தாம் லுவாங் குகை உள்ளது. இங்கு கடந்த ஜூன் 23-ம் தேதி தங்களது கால்பந்தாட்ட பயிற்சியை முடித்த குழு ஒன்று பொதுழுபோக்கிற்றாக சுற்றி பார்க்க சென்றுள்ளது. பயிற்சியாளர் ஒருவர், 12 மாணவர்கள் என மொத்தமாக 13 பேர் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் குகையை விட்டு வெளியே வருவதற்குள் கடுமையான மழை பெய்துள்ளது. இதனால் குகையின் முன்புற வாசல் மழையால் மூடப்பட்டது. தொடர்ந்து தாய்லாந்தில் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இதனிடையே குகைக்குள் காணாமல் போன 13 பேரின் கதி என்ன ஆனது என அந்த நாடே கவலையில் ஆழ்ந்தது. தொடர்ந்து மழையும் பெய்து வந்ததால் மீட்புப் பணிகள் தாமதமானது. 12 மாணவர்கள் உள்பட 13 பேரும் உயிருடன்தான் இருக்கின்றனரா..? அவர்களின் நிலைமை என்ன ஆனது என தெரியாமல் இருந்தது. மாணவர்கள் அனைவரும் 11 லிருந்து 16 வயதிற்கு உட்பட்டவர்கள். பயிற்சியாளரின் வயது 23. எந்த தொடர்பும் அவர்களோடு இல்லாமல் இருந்ததால் குடும்பத்தினர் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில் 13 பேரும் அங்கு வெள்ளம் சூழாத ஒரு இடத்தில் பத்திரமாக உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மீட்புக் குழு மகிழ்ச்சி அடைந்ததோடு அவர்களை பத்திரமாக உயிருடன் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 13 பேரும் உயிருடன் இருப்பது அவர்களிடன் உறவினர்களிடமும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 9 நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் தான் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது.
சிக்கியவர்களை மீட்க குகைக்குள் பல கி.மீ தூரம் வீரர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் குகைக்குள் உடனடியாக செல்ல முடியாததால், குகையில் 25-க்கும் மேற்பட்ட பகுதியில் துளையிடப்பட்டு அதன் வழியாக ஆக்சிஜன் வாயும் செலுத்தப்பட்டு வருகிறது. அவர்களை மீட்க ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டை சேர்ந்த பல வீரர்கள் தாய்லாந்து வந்துள்ளனர். மழையும் வெள்ளமும் வீரர்களின் மீட்புப் பணிக்கு தடையாக இருந்தாலும் விடாமல் தங்களது பணியை மேற்கொண்டு வரும் வீரர்கள் , சிக்கியவர்களை மீட்பதில் குறியாக செயல்பட்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.