Alejandra Marisa Rodriguez
Alejandra Marisa Rodriguez insta
உலகம்

60 வயதில் மிஸ் யுனிவர்ஸ்.. முதல்முறையாக வரலாற்றில் இடம்பிடித்த அர்ஜெண்டினா அழகி!

Prakash J

அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கடந்த ஏப்ரல் 24 அன்று அழகிப் போட்டி நடைபெற்றது. இதில், அர்ஜெண்டினாவைச் சேர்ந்த 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் (Alejandra Marisa Rodriguez) வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் 18 முதல் 73 வயது வரை உள்ள 34 பெண்களுடன் அவரும் போட்டியிட்டார். இதில், அந்த மாகாணத்திற்கு மிஸ் யுனிவர்ஸ் ஆக அலெஜாண்ட்ரா வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

“அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும்தான் அவர் வெல்லக் காரணம்” என போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர். இந்த வெற்றி அவருக்கான கொண்டாட்டத்தை மட்டுமின்றி, அழகிப் போட்டிகள் அனைவருக்குமானதாக மாற வேண்டும் என்பதை உலகிற்கே அறிவித்துள்ளது எனவும் கூறலாம். வெற்றிபெற்ற அலெஜாண்ட்ராவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாண லா பிளாட்டாவைச் சேர்ந்த இந்த அலெஜாண்ட்ரா ஒரு வழக்கறிஞர். சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். தற்போது மருத்துவமனை ஒன்றில் சட்ட ஆலோசகராக உள்ளார். அழகிற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இவரது வெற்றி காட்டுகிறது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண் இவர்தான்.

இதையும் படிக்க: தொடரும் சோகம்| கார் மோதி விபத்து.. அமெரிக்காவில் 3 இந்திய பெண்கள் உயிரிழப்பு

வெற்றி குறித்து அவர், "அழகுப் போட்டிகளில் இப்படியொரு மாற்றம் என்னால் நடந்துள்ளது என்பதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் உடல் அழகை மட்டுமின்றி, அவர்களின் மற்ற மதிப்புகளை வைத்தும் அவர்களை மதிப்பிட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது" என்றார். மேலும், வரும் மே மாதம் அர்ஜென்டினாவில் தேசியளவில் நடைபெறும் பிரபஞ்ச அழகிப் போட்டியில், பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை அலெஜாண்ட்ரா பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். அந்த தொடருக்கு அவர் தயாராகி வருவது குறித்த வீடியோ ஒன்று அவரின் சமூக வலைதளங்களில் பதிவாகி உள்ளது. தேசியளவில் அலெஜாண்ட்ரா வெற்றி பெறும்பட்சத்தில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி மெக்ஸிகோவில் நடைபெறும் உலகளவிலான பிரபஞ்ச அழகி போட்டியில் அர்ஜென்டினா கொடியை அவர் கையில் ஏந்துவார் என கூறப்படுகிறது.

இதற்கு முன்புவரை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பு கடந்தாண்டு நீக்கப்பட்டது. இதன்மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்தப்பெண்ணும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதேபோல டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024-ல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'ஜெய் ஸ்ரீராம்’ என எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள்.. மதிப்பெண் அளித்த 2 பேராசிரியர்கள் இடைநீக்கம்!