உலகம்

இரட்டை குடியுரிமை பிரச்னை… ஆஸி. அமைச்சர் ராஜினாமா

webteam

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தால் ஆஸ்திரேலிய அமைச்சர் மேத்யூ கானாவன் பதவியை ராஜினாமா செய்தார்.

இத்தாலி குடியுரிமை பெற்றவராக மேத்யூ இருக்கலாம் என்று தகவல்கள் வெளியானநிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், எனது தாய் இத்தாலி குடியுரிமை வேண்டி பிரிஸ்பேனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் கடந்த 2006ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது எனக்கு வயது 25. இத்தாலிக் குடியுரிமைக்காக எனது தாயார் விண்ணப்பித்தது தொடர்பாக எந்த தகவலும் எனக்கு தெரியாது என்று தெரிவித்தார். அதுதொடர்பான விண்ணப்பங்களில் எந்த இடத்திலும் தாம் கையெழுத்திடவில்லை என்று கேனாவன் தெரிவித்தார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று கேனாவன் கூறினார். 
இரட்டைக் குடியுரிமை தொடர்பான சட்டப்பூர்வமான விளக்கங்களைப் பெற்ற பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  ஏற்றுமதியை பெருமளவில் நம்பியிருக்கும் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு வளங்களைப் பேணும் துறையின் முக்கியமான அமைச்சராக மேத்யூ கேனாவன் அறியப்பட்டார். 

ஆஸ்திரேலிய நாட்டு சட்டப்படி இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட முடியாது. இரட்டைக்குடியுரிமை விவகாரத்தால் பதவியை ராஜினாமா செய்யும் மூன்றாவது ஆஸ்திரேலிய அமைச்சர் இவராவார். முன்னதாக நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாக அறியப்பட்ட இருவர், அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.