iran - UAE reuters
உலகம்

அரபு உலகில் தொடங்கிய அடுத்த போர்.. களமிறங்கிய பாக்., துருக்கி.. முடிவுக்கு வருமா ஈரானின் ஆதிக்கம்?

நீண்டகாலமாக ஈரானின் ஆதரவு சக்திகளாக இருந்த போராளி இயக்கங்கள் பலவீனமடைந்து ஈரானின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Praveen Joshva L

மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஈரானுக்கும் அதன் அருகில் உள்ள பிற அரபு நாடுகளுக்கும் நீண்டகாலமாக மோதல் போக்கே நிலவி வருகிறது. மேலும் அந்தப் பகுதியின் மேலாதிக்கத்துக்காக சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நீண்டகாலமாக பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. அதோடு சவூதி தலைமையிலான அணிக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகிறது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள போராளிக் குழுக்களுக்கு ஈரான் நீண்டகாலமாக ஆயுதங்கள் வழங்கி, அந்த அமைப்புகளைத் தனது ஆதரவு சக்திகளாகப் பயன்படுத்தி வருகிறது. அதன்படி, காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி அமைப்பு ஆகியவை ஈரானின் ஆதரவு சக்திகளாக இருந்தன.

ஆனால் , ஹமாஸ் - இஸ்ரேல் இடையே 3 ஆண்டுகளுக்கு முன்னர் போர் தொடங்கிய நிலையில், ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்புகளில் 90% அளவு இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாகியுள்ளது. மேலும் ஹமாஸ்க்கு ஆதரவாக வந்த ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்திய நிலையில், அந்த அமைப்பின் பலமும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மீதமிருந்த ஈரானின் ஆதரவு அமைப்பான ஏமனின் ஹவுதி அமைப்பின் மீதும் சவூதி அரேபியா தனது தாக்குதலை கடந்த ஒரு வாரமாக தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் - அமெரிக்கா போரில் ஈரானுக்கு உதவும் வகையில் சவூதி அரேபியா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமனின் அரசு படைகள் உதவியோடு சவூதி அரேபியா இந்த தாக்குதலை தொடங்கியுள்ளது.

மேலும் மெக்கா ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் சவூதி அரேபியாவிற்கு ஆதரவாக தங்கள் படைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளன. இதனால் சவூதி அரேபியா தனது முழுப் பலத்தையும் ஹவுதி அமைப்பைத் தாக்குவதில் காட்டும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஈரானும் பலவீனமடைந்துள்ள நிலையில், அதன் ஆதரவு சக்திகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளும் பலவீனமடைந்துள்ளன.

இதனால் ஹவுதி அமைப்பின் ஆயுத விநியோகம் சீர்குலைந்துள்ள நிலையில், ஹவுதி அமைப்பால் இந்த தாக்குதலை நீண்ட நாட்களாக தொடரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் ஈரானின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.