Trump, Mojtaba Khamenei & Netanyahu web
உலகம்

ஈரான்/ மத்திய கிழக்கில் போர் சூழல்.. கச்சா எண்ணெய், LNG விநியோகத்திற்கு ரெட் அலர்ட்?

அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்திருக்கும் நிலையில் மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்தால் உலக நாடுகள் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சனைகள் .

PT WEB

செய்தியாளர் - M. மீரா

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு தாக்குதல்களை நடத்தியதால், போர் தொடங்கியது. முதல் நாளிலேயே ஈரான் உச்சத் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் போர் தீவிரமடைந்தது. பின்பு ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும் தாக்குதல்கள் தொடர்ந்தவாறே இருந்தன. ஜூன் 17 அன்று போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஈரானும், அமெரிக்காவும் மின்னணு முறையில் கையெழுத்திட்டன. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சுவிட்சர்லாந்திலும், இரண்டாம் கட்டமாக கத்தாரிலும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது.

Trump & Masoud Pezeshkian

இதற்கிடையே கொல்லப்பட்ட உச்சத்தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கு ஜூலை 4 ஆம் தேதி துவங்கி ஊர்வலமாகச் சென்று மஷ்ஹத் நகரில் ஜூலை 9 ஆம் தேதியான நாளை, அவர் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு நிகழ்வின் போது அதில் பங்கேற்றிருக்கும் ஈரான் தலைவர்களை ஒரே அடியில் அழிக்க முடியும் என டிரம்ப் பேசியிருந்தார். இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையில் ஒரேநாளில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவும் பதிலடி கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் மேற்கொண்ட குறுகிய கால போர்நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக முறிந்துவிட்டது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் வளைகுடா முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள் ஒலிப்பதால் இப்பகுதி ஒரு கடுமையான, கட்டுப்பாடற்ற பதற்ற அதிகரிப்பின் விளிம்பில் நிற்கிறது.

Crude Oil

ஈரான் மீண்டும் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடைவிலக்கையும் ரத்து செய்துள்ளது அமெரிக்கா. இதன் தாக்கமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ( Brent crude ) விலை 5.7 சதவீதம் உயர்ந்து பேரலுக்கு 78.41 டாலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை 5.9 சதவீதம் உயர்ந்து பேரலுக்கு 74.60 டாலராகவும் உயர்ந்துள்ளது.

வரும் நாட்களில் தாக்குதல்கள் தீவிரமடைந்தால் ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து 50%-க்கும் அதிகமாகக் குறைந்து, உலகளாவிய வர்த்தகப் பாதைகள் முடங்கிப்போகும். உலகின் மொத்த எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் 20%-க்கும் அதிகமானவை உடனடியாகத் தேக்கமடையும். இது எரிசக்தி விலைகளை இது வரை இல்லாத அளவில் உயர்த்தும்.

Ras Laffan

இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும். இதன் விளைவாக, சர்வதேசக் கடல் பகுதியானது தீவிரமான கடற்படைப் போர் நடைபெறும் களமாக மாறும் அபாயம் இருக்கிறது .

ஏமனில் உள்ள ஹவுதி இயக்கம், பாப் அல்-மண்டாப் ஜலசந்தி மற்றும் செங்கடலில் உள்ள வர்த்தகக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை மீண்டும் தொடங்கக்கூடும், இது சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பிய வர்த்தகத்தை பாதித்து கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க இராணுவச் சொத்துக்களைத் தங்கள் வசம் வைத்திருக்கும் வளைகுடா அரபு நாடுகள் ஈரானின் பதிலடித் தாக்குதல்களால் நேரடியாகக் குறிவைக்கப்பட்டு நிலை குலையும் பட்சத்தில் ஒட்டு மொத்த பொருளாதாரமும் அடிபடும்.