மைக்ரோசாப்ட் புதியதலைமுறை
உலகம்

’இத எதிர்பார்க்கல’ | 25 ஆண்டுகள் நிறைவு செய்தவருக்கு வந்த layoff நோட்டீஸ்.. கலங்கவைக்கும் பதிவு!

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த நிறுவனமானது நேற்று முதல் பணிநீக்க நோட்டீஸை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வருகிறது.

Prakash J

கொரோனா பொது முடக்கத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள் வேலையிலிருந்து அனுப்பப்பட்டனர். தற்போது ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தப் பணி நீக்கங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த நிறுவனமானது நேற்று முதல் பணிநீக்க நோட்டீஸை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வருகிறது.

microsoft

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த மேலாளர் ஒருவரும் உள்ளார். அவர், மைக்ரோசாஃப்டில் தனது 25 ஆண்டுகால பணி நிறைவைக் கடந்த மே மாதம் சிறப்பாகக் கொண்டாடிய நிலையில், தற்போது பணி நீக்க நோட்டீஸை பெற்றிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “கடந்த மே மாதம், மைக்ரோசாஃப்டில் எனது 25 ஆண்டு கால பணி நிறைவைக் கொண்டாடியிருந்தேன். இன்று, என்னை பணி நீக்கம் செய்துவிட்ட நோட்டீஸ் கிடைத்திருக்கிறது. இது எதிர்பாராத திருப்பம். இது என்னை மட்டுமல்லாமல், என்னுடைய ஒட்டுமொத்த குழுவையும் பாதித்திருக்கிறது. நான் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு புதிய அத்தியாயத்தில் பயணிக்கப் போகிறேன். புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கடந்த 2000ஆவது ஆண்டில் இணைந்த அவர், அதில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். அவருடைய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

microsoft

திடீர் பணிநீக்கம் குறித்து பலர் வருத்தத்தை வெளிப்படுத்திய அதே வேளையில், மற்றவர்கள் தொடர்புகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிப் பகிர்ந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இதுவரை, மைக்ரோசாஃப்டின் மிகப்பெரிய பணிநீக்கம் இந்த ஆண்டு மே மாதத்தில்தான் நடந்தது. அப்போது நிறுவனம் சுமார் 6,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. இது அதன் உலகளாவிய பணியாளர்களில் கிட்டத்தட்ட 3% ஆகும்.