உலகம்

2023 ஆரம்பிச்சு ஒரு மாதம் கூட ஆகல.. அதுக்குள்ள 35 ஆயிரம் பேர் பணிநீக்கம்! யார், யார்?

webteam

சர்வதேச அளவில் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம், சுமார் 11,000 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தற்போது உலகம் முழுவதும் 2 லட்சத்து 21 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் அமெரிக்காவிலும், 99 ஆயிரம் பேர் மற்ற நாடுகளிலும் பணியில் இருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் 1,000 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 11,000 பேரை நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், பொறியியல் மற்றும் மனிதவளப் பிரிவுகளில்தான் அதிக அளவில் பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதள்ள, கடந்த ஆண்டு ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அடுத்த இரண்டு ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மிகவும் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். கொரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தில், தேவைக் குறைவு மற்றும் பொருளாதார நலிவு போன்ற பல்வேறு காரணங்களால், சர்வதேச அளவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், ட்விட்டர், மெட்டா, ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

2022ஆம் ஆண்டில் மட்டும், சர்வதேச அளவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 11 ஆயிரம் பேரும், அமேசான் நிறுவனத்தில் இருந்து 18 ஆயிரம் பேரும், ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து 7 ஆயிரத்து 500 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

2023ஆம் ஆண்டு தொடங்கி இன்னும் ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமேசான், விமியோ, சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் அதிக அளவில் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸும் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இதன் தலைமை அலுவலகம் நியூயார்க்கில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சிஇஓ டேவிட் சாலமன், பணியாளர்களுடனான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்துகொண்ட அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களில் 3,000 பேரை ஒரேநாளில் பணி நீக்கம் செய்துள்ளது. ஏற்கெனவே, இந்த நிறுவனம், ஜனவரியில் 3,200க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிக்கைகளை வெளியிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த நடவடிக்கை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஜெ.பிரகாஷ்