அமெரிக்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு 44வது அதிபராகப் பதவியேற்றவர் பராக் ஒபாமா. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த அவர், 2017ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இவருடைய மனைவி, மிச்செல் ஒபாமா. சமீபகாலமாக இவருக்கும் ஒபாமாவுக்கும் இடையே விவாகரத்து பற்றிய வதந்தி செய்திகள் வேகமாகப் பரவின.
கடந்த ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளாததும், ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் மிச்செல் கலந்துகொள்ளாததும் அவர்களுக்குள் விவாகரத்து பற்றிய வதந்தி செய்திகளுக்குக் காரணமாய் அமைந்தன. எனினும், மிச்செல்லின் பிறந்தநாளுக்கு தனது எக்ஸ் பதிவில் உருக்கமாக வாழ்த்து தெரிவித்து விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு ஒபாமா முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில், பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிச்செல், அரசியல் நிகழ்வுகளில் விலகியிருந்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர், “என்னுடைய நாட்களை நானே தீர்மானிக்கும் வாய்ப்பு இப்போது எனக்கு உள்ளது. இதுபோன்ற முடிவுகளை நான் பல வருடங்களுக்கு முன்பே எடுத்திருக்க முடியும். ஆனால் அந்த சுதந்திரத்தை நான் அப்போது எடுத்துக் கொள்ளவில்லை. எனது குழந்தைகளுக்கு, அவர்களுக்கான வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டி இருந்தது. அதனால் அப்படி ஒரு முடிவை அப்போது நான் எடுக்காமல் இருந்தேன் எனலாம். ஆனால் அதுவும்கூட ஒரு சாக்காகவே இருக்கும். இப்போது, நான் என்ன செய்ய வேண்டும் என்று பிறர் விரும்புவதைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக எனக்கு எது சிறந்ததோ அதை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.
பெண்களாகிய நாம் போராடுவதும் இதற்காகத்தான். நான் எனக்கான விருப்பத்தைத் தேர்வு செய்துள்ளேன் என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நானும் எனது கணவரும் விவாகரத்து செய்யவிருக்கிறோம் எனக் கருதப்படும் நிலையே இங்கே உள்ளது. இப்போதும்கூட ஒரு பெண் தனக்காக சில முடிவுகளை எடுக்க முடியாது இல்லையா? நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்தச் சமூகத்தின் பொதுபுத்தியில் தீர்மானிக்கப்பட்டிருக்கும் விஷயங்களில் இருந்து நமது முடிவு மாறுபட்டிருந்தால், அது எதிர்மறையான பயங்கரமான விஷயங்களாக கருதப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.