உலகம்

மெசேஜில் காதலனை தற்கொலைக்குத் தூண்டிய காதலி

மெசேஜில் காதலனை தற்கொலைக்குத் தூண்டிய காதலி

webteam

குறுந்தகவல் மூலம் காதலனை, தற்கொலைக்குத் தூண்டியதாக அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் கான்ராட் ராய். கடுமையான மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 12ல் தற்கொலை செய்துகொண்டார். அவர், தனது காரில் இருந்த தண்ணீர் பைப் வழியாக கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசித்து அவர், தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர், மனஉளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்த ராயைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதாக அவரது காதலி மிச்செல் கார்டர் மீது குற்றம்சாட்டியுள்ளனர். மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராய், ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதாகவும், நண்பர் ஒருவரால் அவர் காப்பாற்றப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், ராய் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக 20,000த்துக்கும் மேற்பட்ட குறுந்தகவல்களை மிச்செல் கார்டர் அவருக்கு அனுப்பியதாகவும், குறிப்பாக அவர் தற்கொலை செய்துகொள்ளுவதற்கு சில நாட்கள் முன்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும் போலீசார் மசசூசெட்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக காரின் தண்ணீர் பம்ப் வேலை செய்யவில்லை என்று கூறி வெளியேற முயன்ற ராயை, மீண்டும் காருக்குள் சென்று தற்கொலை செய்துகொள்ளுமாறு கார்ட்டர் குறுந்தகவல் மூலம் வலியுறுத்தியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மிச்செல் கார்டரின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட அமெரிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.