அமெரிக்கா அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில், மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என மாற்றம் செய்யப்படுமென அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கூகுள் மேப்பில், அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டும் இந்த மாற்றம் செய்யப்படுமென கூகுள் நிறுவனமும் தெரிவித்திருந்தது. அதாவது, ’மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என்று தெரியும்’ என அது அறிவுறுத்தியுருந்தது. தொடர்ந்து அடுத்த சில நாள்களிலேயே கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை ’அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றியது.
இருப்பினும், இந்த பெயர் மாற்றமானது கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டது. மெக்சிகோ வளைகுடாவில் கூகுள் மேப் செயலியில் ’மெக்சிகோ வளைகுடா’ என்றும், அமெரிக்காவில் ’அமெரிக்க வளைகுடா’ என்றும், இதர நாட்டில் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா (அமெரிக்க வளைகுடா) என்றும் கூகுள் நிறுவனம் பெயர் மாற்றம் செய்துள்ளது.
இதையடுத்து, ”கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய காரணத்தால் கூகுள் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் தெரிவித்துள்ளார். மேலும், “சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க கூகுள், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் மெக்சிகோ பெயர் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஒன் விமானத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகருக்குப் பயணித்தபோது, இதற்கான ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்ட வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்தது குறிப்பிடத்தக்கது.