இந்தியாவின் பிரபல நிதிநுட்ப நிறுவனமான க்ரெட் (CRED)-இன் நிறுவனரும் சிஇஓ-வுமான குணால் ஷா, உலகளவில் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப் அமைப்பின் புதிய உலகளாவிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2019 முதல் சுமார் 7 ஆண்டுகளாக வாட்ஸ்அப் அமைப்பை வழிநடத்தி வந்த வில் கேத்கார்ட் தனது பதவியிலிருந்து விலகுவதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு குணால் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வில் கேத்கார்ட் முற்றிலும் விலகாமல், மெட்டா நிறுவனத்திற்குள்ளேயே செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, குணால் ஷா வாட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராகப் பொறுப்பேற்று, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெட்டா தலைமையகத்திற்கு இடம்பெயர உள்ளார்.
அதேநேரத்தில், க்ரெட் நிறுவனத்தின் புதிய இடைக்கால சிஇஓ-வாக அதன் தற்போதைய உத்தி மற்றும் நிதித்துறைத் தலைவர் மிதேன் சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், குணால் ஷா க்ரெட் நிறுவனத்தின் தலைவராக நீடிப்பார். மேலும், மெட்டா நிறுவனம் கிரெட் நிறுவனத்தில் 8,550 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் க்ரெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. எனினும், இந்தப் புதிய முதலீட்டின் மூலம் மெட்டா நிறுவனம் க்ரெட்டின் சிறிய பங்குதாரராக மாறும் என்றும், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் எதுவும் பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் வெறும் சாட்டிங் செயலியாக மட்டுமில்லாமல், வாட்ஸ்அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை, வணிகச் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டும் தளமாக மாற முயன்று வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் பிரீமியம் வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் குணால் ஷாவுக்கு உள்ள அசாத்திய அனுபவம், வாட்ஸ்அப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என மெட்டா நம்புகிறது. மேலும், வாட்ஸ்அப்பிற்கு உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ள போதிலும், அதன் மிகப்பெரிய சந்தையாக இருப்பது இந்தியாதான் (50 கோடிக்கும் அதிகமான பயனர்கள்). இதையடுத்தே இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றம் குறித்து மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், "குணால் ஷா க்ரெட் நிறுவனத்தை இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியுள்ளார். உலகின் மிகப்பெரிய மெசேஜிங் செயலியை இயக்குவதற்குத் தேவையான உலகளாவிய பார்வையும், புதியவற்றை உருவாக்கும் திறனும் அவரிடம் உள்ளது” எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.