ஆபரேஷன் சிந்தூர் எக்ஸ் தளம்
உலகம்

ஆபரேஷன் சிந்தூர் | ”ஆரம்பத்தில் விரக்தியடைந்தேன்.. ஆனால்” - சிங்கப்பூர் பெண்!

”ஆரம்பத்தில் இந்திய அரசு நடவடிக்கை இல்லாதது என்னை விரக்தியடையச் செய்தது” என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் பெண் தெரிவித்துள்ளார்.

Prakash J

பஹல்காம் தாக்குலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதையடுத்து எல்லைகளில் தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கிடையே அமெரிக்கா தலையிட்டதன்பேரில் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்தியா யாருடைய தலையீடும் இல்லாமல் முடிவு எடுத்ததாக சொன்னது.

வைஷாலி பட்

இதற்கிடையே பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. அந்தக் குழுவினர் ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்கள் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். அந்த வகையில், பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். அவர், சிங்கப்பூர் சென்றிருக்கும் இந்திய எம்பிக்கள் குழுவிடம் அன்று நடந்த விஷயத்தைக் கூறியிருக்கிறார்.

வைஷாலி பட் என்ற பெயர் கொண்ட அவர், எம்பிக்களிடம், "நான், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் இருந்தேன். பயங்கரவாத தாக்குதலின்போது நூலிழையில் தப்பித்தேன். இதற்கு இந்திய அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பி தினமும் காலையில் செய்தித்தாள்களைப் படிப்பேன். ஆனால், ஆரம்பத்தில் இந்திய அரசு நடவடிக்கை இல்லாதது என்னை விரக்தியடையச் செய்தது.

ஆபரேஷன் சிந்தூர்

ஆனால் மே 7ஆம் தேதி, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டதைப் பற்றி நான் படித்தபோது, ​​என்னையும் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். அது எனக்கு நிறைய மனநிறைவைத் தந்தது. 'சிந்தூர்' என்ற பெயர் பொருத்தமாக இருந்தது. வேறு யாரும் அதைச் செய்திருக்க முடியாது. இந்தப் பெயருக்கும், நடவடிக்கைக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.