ட்ரம்ப் உடன் இணைந்து போஸ் கொடுக்க மறுத்து மெலானியா நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதிவியேற்ற போது, பதவியேற்பு விழாவை புறக்கணித்துவிட்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்டு ட்ரம்ப். இதையடுத்து ஃபுளோரிடாவில் ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலானியாவும் விமானத்திலிருந்து இறக்கி வந்தபோது, அங்கு குழுமியிருந்த புகைப்படக்காரர்களுக்கு ட்ரம்ப் கைகளை அசைத்து போஸ் கொடுத்தார்.
ஆனால் மெலானியாவோ, ட்ரம்ப் உடன் ஒரு ஃபார்மாலிட்டிக்காக கூட நில்லாமல் இறங்கிய வேகத்தில் நடையை கட்டினார். இதனால் ட்ரம்ப் தனியாளாக நின்று போஸ் கொடுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தார். நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் ‘பலவிதமான’ கேப்ஷன்களை போட்டு பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றபோது அவரை மெலானியா விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக ட்ரம்பின் உதவியாளர்கள் கூறிவந்தனர். தற்போது அதற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த வீடியோ மேலும் பூதாகரமாக கிளம்பியுள்ளது.
டொனால்டு ட்ரம்ப்பின் மூன்றாவது மனைவியான மெலானியா, ட்ரம்பை விட 24 வயது இளையவர் ஆவார். கடந்த 2005-ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.