சூரிய வெடிப்பால் உருவான காந்தப் புயல்கள் பூமியின் காந்தப்புலத்தை பாதிக்கக்கூடும். இதனால் செயற்கைக்கோள்கள், ஜிபிஎஸ், வானொலித் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேசமயம், வலுவான புயலினால் அரோரா ஒளிக்காட்சிகள் துருவப் பகுதிகளைத் தாண்டி மற்ற இடங்களிலும் தோன்றவும் வாய்ப்பு உள்ளது.
செய்தியாளர் - M.மீரா
சூரியனில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த வெடிப்புகளால் பூமியை நோக்கி சூரியப் புயல்கள் வரக்கூடும் என்று விண்வெளி வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் பூமியின் காந்தப்புலத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுடன், செயற்கைக்கோள்கள், வானொலித் தகவல் தொடர்பு மற்றும் ஜிபிஎஸ் வழிகாட்டி அமைப்புகளிலும் சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், வானில் வண்ணமயமான அரோரா ஒளிக்காட்சிகளைக் காணவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சூரியனில் திடீரென அதிக அளவு ஆற்றல் வெளியேறுவதை சூரிய வெடிப்பு (Solar Flare) என்று அழைக்கிறார்கள். அக்டோபர் 8 அன்று, சூரியனில் உள்ள 4549 என்ற சூரியப் புள்ளியில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சூரியனில் நடுத்தர வலிமை கொண்ட M6.7 வகை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வெடிப்புகள் சில நேரங்களில் பூமியில் வானொலித் தகவல் தொடர்புகளைப் பாதிக்கக்கூடும்.
இந்த வெடிப்பின்போது, சூரியனின் வளிமண்டலத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி அலை உருவாகியுள்ளது. இதற்கு மோர்டன் அலை (Moreton Wave) என்று பெயர். இது சூரியனின் மேற்பரப்பில் வேகமாகப் பரவும் வெப்பமான பிளாஸ்மா மற்றும் காந்த ஆற்றலுடன் தொடர்புடையது. இந்த அலை மணிக்கு 10 லட்சம் மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூரியனில் இருந்து அதிக அளவிலான பிளாஸ்மா மற்றும் காந்த ஆற்றல் விண்வெளியில் வெளியேறியுள்ளது. இதற்கு coronal mass ejections (CME) என்று பெயர். இதுபோன்ற வெளியேற்றங்கள் பூமியை வந்தடையும்போது, பூமியின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொண்டு புவி காந்தப் புயல்களை உருவாக்கலாம்.
அக்டோபர் 8 இல் ஏற்பட்ட வெடிப்பால், அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 11 ஆகிய தேதிகளில் பூமியை நோக்கி மூன்று சூரியப் புயல்கள் வரை வரக்கூடும். இவை G1 எனப்படும் குறைந்த பாதிப்பு முதல் G3 எனப்படும் வலுவான பாதிப்பு வரையிலான புவி காந்தப் புயல்களை ஏற்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்தப் புயல்களால் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள், ஜிபிஎஸ் சேவைகள் மற்றும் வானொலித் தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மிக வலுவான புயல்கள் ஏற்பட்டால் மின்சாரக் கட்டமைப்புகளிலும் பாதிப்புகள் உருவாகலாம்.
இதற்கிடையே, சூரியப் புயலால் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களுடன் மின்னூட்டம் பெற்ற துகள்கள் மோதும்போது, வானில் பச்சை, சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் அரோரா ஒளிக்காட்சிகள் தோன்றும். வழக்கமாகத் துருவப் பகுதிகளில் காணப்படும் இந்த ஒளிக்காட்சிகள், வலுவான புவி காந்தப் புயலின்போது மற்ற பகுதிகளிலும் தெரிய வாய்ப்புள்ளது.
இருப்பினும், சூரியப் புயலின் உண்மையான தீவிரம் அதன் வேகம், அடர்த்தி மற்றும் காந்தப்புலத்தின் திசையைப் பொறுத்தே அமையும். எனவே, பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.