தனது ஓவியங்களாலும், மீசையாலும் உலகப் புகழ்பெற்ற ஸ்பெயின் ஓவியர் சல்வதோர் தலீயின் உடல், கல்லறையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
அவரது மகள் என்று உரிமை கோரிவரும் மரியா ஏபல் என்பவரின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, மரபணு சோதனைக்காக தலீயின் உடலைத் தோண்டுவதற்கு ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மரபணு சோதனைகளுக்குப் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்படும். 1989-ஆம் ஆண்டு தனது 84-ஆம் வயதில் இறந்த தலீ, ஆழ்மன வெளிப்பாட்டியம் என்ற கொள்கையைப் பின்பற்றியவர். மனித மனதை விடுவிப்பதன் மூலம், மனிதனையும் சமூகக் கட்டுக்களில் இருந்து விடுவிக்க முடியும் என்று இவர் நம்பினார். இவரது ஓவியங்கள் விவரிக்க இயலாத அதீதக் கற்பனையைக் கொண்டிருப்பவை. மைக்கேல் மதன காமராஜர், இருபத்து மூன்றாம் புலிகேசி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் இவரது மீசையின் தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.