இலங்கையில் சூழல் சரியாகாவிட்டால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு பல நோயாளிகள் இறக்க நேரிடும் என அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் உணவுப்பொருட்கள், எரிபொருள், மின்சார தட்டுப்பாட்டைத் தொடர்ந்து மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக ஸ்கேன் உள்ளிட்ட சேவைகள் கூட ஸ்தம்பித்துள்ளன. இந்நிலையில் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் கூட இல்லாத நிலை உள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சாதாரணமான சிகிச்சைகளை ஏற்கனவே நிறுத்திவிட்டதாகவும் உயிருக்கு அபாயம் ஏற்படும் அளவில் உள்ள நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வருவதாகவும் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்னும் சில நாட்களில் மருந்து தட்டுப்பாடு சீராகவில்லை என்றால் நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை பதவி ஏற்றிருந்தாலும் நிதி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் செயல்படாமல் ஸ்தம்பித்துள்ளன. இதனால் எந்த முடிவுகளும் எடுக்க முடியாத நிலை உள்ளது. அவசர நிலை அறிவிக்கப்பட்டு அதுவும் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. தேசிய அரசில் இடம் பெற முடியாது என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன.
நிலைமையை எப்படி சமாளிப்பது என இலங்கை நாடாளுமன்றம் 3 நாட்கள் கூடி விவாதித்தபோதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. நாடெங்கும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதனால் இலங்கை எதை நோக்கி செல்கிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.