உலகம்

மே தின கொண்டாட்டத்தில் வன்முறை

webteam

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் போது முகமூடி அணிந்து கடைகளை சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வழக்கம் போல இந்த ஆண்டும் பாரிஸ் நகரில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது முகமூடி அணிந்தபடி கூட்டத்துக்குள் புகுந்த சுமார் ஆயிரத்து 200 பேர் திடீரென வன்முறையில்‌ ஈடுபட்டனர். அருகில் இருந்த கடைகளை சூறையாடியதுடன், வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் வன்முறையாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடி‌த்தும் விரட்டி அடித்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக 200‌ பேரை கைது செய்தனர்.

தொழில் துறையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கொண்டு வந்த சீர்திருத்தத்தால், பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நடவடிக்கையை கண்டித்து ‌ஏற்கெனவே ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த பணியாளர்கள் நாடு தழுவிய அளவில் கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது அந்நாட்டு அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.