உலகம்

’அம்மாடி! எவ்ளோ பெரிய பந்து’ - ஜப்பானில் கண்டறியப்பட்ட ராட்சத மர்ம பொருளால் பரபரப்பு!

Sinekadhara

ஜப்பான் கடற்கரையில் உலோகத்தாலான மிகப்பெரிய பந்து ஒன்று மர்மமான முறையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஹமாமத்சு நகரத்திலுள்ள என்ஷூ கடற்கரையில் உலோகத்தால் ஆன மிகப்பெரிய உருண்டை வடிவ பந்து கிடந்துள்ளது. இந்த மர்ம பந்தை உள்ளூர்வாசியான பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை பார்த்துள்ளார். உடனடியாக இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் கிடந்த அந்த மர்ம பந்து இரும்பாலானதும், 1.5 மீட்டர் விட்டமும், துருப்பிடித்தும் இருந்துள்ளது. மேலும், அதனை மாட்டி தொங்கவிடும் வகையில் இருபக்கமும் சிறு இணைப்பு வளையமும் உள்ளது. 200 மீட்டர் மூடப்பட்ட பகுதியான அந்த பந்தில் வெடிக்கும் காரணிகள் ஏதேனும் இருக்கின்றதா என்பதை பாதுகாப்பு உடைகளை அணிந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அதன் உள்ளே ஏதுமில்லை எனவும், வெற்றிடமாகத்தான் இருந்தது எனவும் அதனை எக்ஸ்ரே செய்த அதிகாரிகள் தெரிவித்ததாக உள்ளூர் மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும், அந்த பந்தினை மாலை 4 மணியளவில் அங்கிருந்து அகற்றிவிட்டபோதிலும் அது என்னவென்று இதுவரை தெரியவில்லை என FNN தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ஆராய ஜப்பான் ராணுவம் மற்றும் கடற்கரை காவல்படைக்கு புகைப்படங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ள இந்த ராட்சத மர்ம பந்தானது என்னவாக இருக்கும் என சமூக ஊடகங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்க ராணுவத்தால் தொடர்ந்து மர்ம பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் பிரிட்டன் அரசு தங்களது பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.