ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ் பெறப்பட்டது.
ரஷ்யா மற்றும் அலஸ்கா பகுதிகளுக்கு இடையே நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
ரஷ்யாவின் நிகோடஸ்கோய், பீரிங் தீவிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 11.7 கி.மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 அளவாக பதிவாகியுள்ளது. இதனால் கம்சட்கா பகுதியில் உள்ள கிளியூசெஸ்காய் எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. இதனால் பொதுமக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 3 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும்பக்கூடும் என்றும், இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது, இந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக, பசிபிக் பெருங்கடலில் கடந்த ஜனவரி மாதம் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.