செய்தியாளர் - M.மீரா
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வரும் நிலையில், அந்த நாட்டுடன் சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.25 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். அமெரிக்காவின் தடைகளையும் மீறி சீனா இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பது சர்வதேச அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
சீனா மற்றும் ஈரான் இடையிலான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஈரானில் 11 முக்கியத் துறைகளில் சுமார் 150 முதலீட்டுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியையொட்டி நடந்த முதலீட்டாளர் கூட்டத்தில் இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், சுரங்கத் தொழில், உற்பத்தி, விவசாயம், போக்குவரத்து மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஈரானின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 250 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுவதாக அந்நாட்டு பொருளாதார மற்றும் நிதித்துறை துணை அமைச்சர் மெஹ்தி ஹெய்தாரி தெரிவித்துள்ளார். இதில் 45 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை பெட்ரோ கெமிக்கல் துறைக்கு தேவைப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் புறக்கணித்து ஈரானுடன் சீனா கைகோர்ப்பது ட்ரம்ப் நிர்வாகத்துக்கு புதிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த 300 பில்லியன் டாலர் என்பது சீனா ஏற்கெனவே முதலீடு செய்த தொகையோ, இரு நாடுகளும் கையெழுத்திட்ட இறுதி ஒப்பந்தமோ அல்ல. ஈரான் சீன முதலீட்டாளர்களிடம் முன்வைத்துள்ள திட்டங்களின் மொத்த மதிப்பாகும்.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்து வருகிறது. ஆனால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் இல்லாமல் விதிக்கப்படும் ஒருதலைப்பட்சத் தடைகள் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிப்பதாக சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.