உலகம்

“சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார்” - ஐநா அறிவிப்பினால் நடக்கபோவது என்ன?

Rasus

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஜெய்ஷ் இ முகமது பயங்கவராத அமைப்பு இந்தியாவில் இதற்கு முன்பும் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்திலேயே தாக்குதல், உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது.

இதனையடுத்து இந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தியது. இந்நிலையில் தற்போது அதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தற்போது அறிவித்துள்ளது.

இ‌தற்கு முன், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி கடந்த மார்ச் மாதம் தீர்மானம் கொண்டு வந்தபோது, சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டது. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தீர்மானம் வெற்றி பெற்றதால், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா பாதுகாப்பு சபை அறிவித்தது.

இந்நிலையில் சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரின் அனைத்து விதமான சொத்துகளும் முடக்கப்படும். மசூத் அசாருக்கு எந்தவொரு நாட்டில் சொத்துகள் இருந்தாலும் அதனை உடனடியாக முடக்க வேண்டும். அத்துடன் அவர் எந்த நாட்டிற்கும் பயணம் செய்ய முடியாது.

மசூத் அசார் உடன் நேரடியாகவே அல்லது மறைமுகவோ தொடர்பு வைத்திருக்க கூடாது. நாடுகள் அதனை அனுமதிக்கவும் கூடாது. மசூத் அசார் தங்கள் நாடுகள் வழியாக பயணிக்கவில்லை என்பதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும்.

மசூத் அசார் மீது விதிக்கப்பட்ட தடை செயல்படும் விதம் குறித்து ஆராயக் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு இது குறித்த அறிக்கையை ஐநா பாதுகாப்பு சபைக்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும். மசூர் அசார் மீதான தடை இந்தியாவிற்கு எந்த அளவு வெற்றியாக பார்க்கப்படுகிறதோ அந்த அளவிற்கு பாகிஸ்தானுக்கு அது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மசூத் அசார் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுள்ளது.