ஃபேஸ்புக் தனக்கு எதிராக செயல்படுகிறது என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டுக்கு, அனைவரின் சிந்தனைகளுக்குமான ஒரு தளமாக ஃபேஸ்புக்கை உருவாக்க முயற்சித்து வருவதாக மார்க் ஸூகர்பெர்க் பதலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னணி சமூகவலைதளம் தேர்தல் நேரத்தில் தனக்கு எதிராக செயல்பட்டது என்று குற்றம்சாட்டி இருந்தார். மேலும், தேர்தல் நேரத்தில் ஃபேஸ்புக், ட்ரம்ப் எதிர்ப்பு நிலையை எப்போதும் கொண்டிருந்தது. இப்போதும், மன்னிப்புக் கேட்டுக்கொண்ட நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் ட்ரம்ப் எதிர்ப்பு, தவறான செய்திகளை பரப்புவது மற்றும் தனக்கு எதிராக சதி செய்வது போன்ற செயல்பாடுகளை தொடர்கின்றன என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அனைத்துவித மக்களின் சிந்தனைகளுக்குமான களமாக ஃபேஸ்புக்கை உருவாக்க கடுமையாக முயற்சித்து வருகிறோம். அதிபர் ட்ரம்ப் குறித்த பிரச்னைக்குரிய விளம்பரங்களைத் தவிர்த்து, தேர்தலின் போது வேட்பாளர்கள் மக்களிடம் நேரடியாக கலந்துரையாட வழிவகை செய்தது, லட்சக்கணக்கானோர் வாக்களிக்கவும் உதவியுள்ளது.
தங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் குறித்து, அமெரிக்க அரசியலின் இரு தரப்பினருமே வருத்தத்தில் இருக்கின்றனர். தாராளமய சிந்தனை உடையவர்கள் ட்ரம்பின் வெற்றியைத் தான் சாத்தியப்படுத்தியதாக தன் மீது குற்றம் சுமத்துகின்றனர். கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இணையதள விளம்பரங்களுக்காக பல கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டனர். தங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்படும் பிற விளம்பரங்களைவிடவும், அரசியல் விளம்பரங்கள் ஆயிரம் மடங்கு பிரச்னைக்குரியதாக இருந்தது. எல்லோருக்குமான சமூகத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளை ஃபேஸ்புக் தொடரும். தவறான செய்திகளை பரப்ப முயலும், தேர்தல் முடிவுகளை மாற்ற முயலும் அரசுகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்க்கும்” என்று மார்க் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ட்ரம்புக்கு சாதகமாக மாற்ற ரஷ்யா முயற்சி செய்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் மற்றும் எஃப்.பி.ஐ ஆகியவை இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் குறுக்கீடு உள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரிக்கும் காங்கிரஸ் விசாரணைக் குழுவிடம் தமது 3,000 அரசியல் விளம்பரங்களை ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் அளிக்கவுள்ளது. 2016-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தபோதும், அதற்கு பின்பும், ஃபேஸ்புக்கின் விளம்பரங்களை, ரஷ்ய நிறுவனங்கள் வாங்கியிருக்கலாம் என ஃபேஸ்புக் நம்புகிறது. ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக கூறப்படும் குற்றசாட்டுகளுக்காக, நவம்பர் 1-ஆம் தேதி, ஃபேஸ்புக், கூகுள் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள், அமெரிக்காவின் புலனாய்வுக் குழு முன்பு சாட்சியம் அளிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.