உலகப் புகழ்பெற்ற லண்டன் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரைக் காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர்.
லண்டன், இங்கிலாந்து இங்கிலாந்தின் தேம்ஸ்நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள லண்டன் மேம்பாலத்தில் போக்குவரத்து அதிகளவில் காணப்படுவது வழக்கம். இந்நிலையில் கருப்பு நிற உடையணிந்து வந்த நபர், மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது கூர்மையான கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில் சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த லண்டன் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்தனர். அப்போது மேம்பாலத்தின் தரையில் தாக்குதல் நடத்திய நபருடன் சிலர் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களை விலக்கிவிட்டு பயங்கரவாதியை காவல்துறையினர் எச்சரித்தனர். தொடர்ந்து மூர்கத்தனமாக நடந்து கொண்ட அந்த நபரை நோக்கி காவல்துறையினரின் துப்பாக்கியால் சுட்டனர். குண்டுகள் பாய்ந்த நிலையில் தாக்குதல் நடத்திய நபர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்களை மீட்ட காவல்துறையினர், அவர்களை லண்டன் ராயல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுட்டுவீழ்த்தப்பட்ட நபர் போலி பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததாகவும், போலி வெடிகுண்டுகள் வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து லண்டன் மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட நபருடன் துணிச்சலுடன் சண்டையிட்ட பொதுமக்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெகுவாக பாராட்டி உள்ளனர். பயங்கரவாத செயல்களுக்கு இங்கிலாந்து எப்போதும் அடிபணியாது என அவர் கூறியுள்ளார். இதே லண்டன் மேம்பாலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர்.