பிலிப்பைன்சில் இளைஞர் ஒருவர் அரிய வகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டு அவரது தோற்றம் அகோரமாக மாறிக்கொண்டிருக்கிறது.
பிலிப்பைன்சின் அக்லான் மாகாணத்தை சேர்ந்தவர் அன்டோனியோ ரெலோஜ் (26). இவருக்குப் பிறக்கும் போதே இச்தியாசிஸ் என்ற தோல் நோய் ஏற்பட்டது. இதனால் அவரது தோல்கள் தடித்து, வெடித்த நிலையில் காணப்படுகிறது. இந்த நோயின் தாக்கத்தால் 26 வயது இளைஞரான இவர், வயதானவர் போன்று காணப்படுகிறார். இவர் கண்கள் பாதிப்படைந்து வித்தியாசமாகக் காட்சியளிக்கிறது. நோயின் தீவிரத்தால் தலை முடி உதிர்ந்து காணப்படுகிறது. பிறக்கும் போதே இந்த அரிய தோல் நோயால் பாதிக்கப்பட்ட இவரை சிறு வயதிலே அவரது பெற்றோர்கள் கைவிட்டுவிட்டனர். இதனால் இவரது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். இச்தியாசிஸ் நோய்க்காக மானிலாவில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதுபற்றி அன்டோனியோ ரெலோஜ் கூறும்போது, ‘சிறுவயதில் இருந்தே இந்த நோயால் போராடி வருகிறேன். இதனால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சங்கடமாக இருக்கும். பொழுதுபோக்கிற்காக தேவாலயங்கள் மட்டும் செல்வேன். தன் தோற்றத்தைக் கண்டு பலரும் என்னை பேய் மனிதன் என்று பயப்படுவார்கள். என் உடலில் தீய ஆவி இருப்பதாகவும் சிலர் விமர்சிப்பார்கள். எனக்கும் மற்றவர்கள் போல் வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இந்த நோயால் சபிக்கப்பட்டுள்ளேன்’ என வேதனையோடு சொல்கிறார்.