உலகம்

’ஹிர்த்திக் ரோஷன் ரசிகையா?’ மனைவியைக் குத்திக்கொன்று கணவன் தற்கொலை!

webteam

இந்தி நடிகர் ஹிர்திக் ரோஷனை பிடிக்கும் என்று அடிக்கடி கூறிய மனைவியை குத்திக்கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர், இந்தியாவைச் சேர்ந்த தினேஷ்வர் (33). இவரது மனைவி டோனி டோஜோய் (27). அங்குள்ள பார் ஒன்றில் பணியாற்றி வந்தார். டோஜோய் அழகாக இருப்பாராம். அவர், தினேஷ்வரை விட அதிகமாகச் சம்பாதித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு டோஜோயின் சகோதரிக்கு செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதை எடுத்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. அதில், உங்கள் தங்கை டோஜோயை கொன்றுவிட்டேன். வீட்டுச்சாவியை, கீழே பூந்தொட்டியில் வைத்திருக்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உறவினர்களுடன் அவசரமாக வீட்டுக்கு வந்து பார்த்தார் சகோதரி. ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் டோஜோய். அந்த குடியிருப்புக்கு எதிரில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தினேஷ்வர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவர் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையை தொடங்கினர்.

டோஜோவின் தோழியும் கரோக்கி பாடகியுமான மாலா ராம்தானி கூறும்போது, ‘டோஜோய், இந்தி நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் தீவிர ரசிகை. அவர் படம் வெளியானால் முதல் நாளிலேயே பார்த்துவிடுவார். எப்போதும் அவர் நடித்த படங்களின் பாடல்களைத்தான் கேட்டுக்கொண்டிருப்பார்.

இதுபற்றி தினேஷ்வரிடம் டோஜோய் சொன்னது போது, அவரால் தாங்க முடியவில்லை. பொறாமை கொண்டார். அவர் வரும்போது ஹிர்த்திக் நடித்த பட பாடல்களை பார்த்து கொண்டிருந்தால் நிறுத்தும்படி சொல்வார். இதனால் டோஜோய் மீது வெறுப்பு இருந்தது. அதனால் இந்த கொலை நடந்திருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘’டோஜோய் அழகாக இருப்பார். அவரை தினேஷ்வர் அதிகம் விரும்பினார். அதனால் பொறாமை கொண்ட அவர், தனது கட்டுப்பாட்டுக்குள் அவள் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக அவரை கொன்றுவிடுவதாகக் கூட மிரட்டினார். ஆனால், அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் டோஜோயும் தினேஷ்வரை அதிகம் விரும்பினார்’’ என்றார் டிஜோயுடன் கடந்த 4 வருடமாகப் பழகி வந்த ரோட்னி.

போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.