உலகம்

எரிமலைக்கு தேனிலவு பயணம் - பள்ளத்தில் விழுந்த கணவனை காப்பாற்றிய மனைவி

rajakannan

எரிமலைக்கு தேனிலவு பயணம் சென்ற போது, பள்ளத்தில் விழுந்த கணவரை மனைவி காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இண்டியனா பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதி கிளே சாஸ்டேன், அகைமியி சாஸ்டேன். இந்த ஜோடி, தங்களது தேனிலவுக்காக கரீபியன் பகுதியில் உள்ள செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள செயலிழந்த எரிமலைக்கு சென்றுள்ளனர். அப்போது, தங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஒரு விபரீத சம்பவம் அவர்களுக்கு நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூலை 18 ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருமணமான சில தினங்களில் அந்த ஜோடி இந்த தேனிலவு பயணத்தை மேற்கொண்டுள்ளனர். செயிண்ட் கிட்ஸில் உள்ள லியமியுகா என்ற எரிமலையின் உச்சிக்கு செல்வது என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, எரிமலையில் அந்த உச்சிக்கும் இருவரும் சென்றுவிட்டனர். ஆனால், இன்னும் எரிமலையை சரியாக பார்க்க வேண்டுமென விரும்பிய கணவர் கிளே சாஸ்டேன் சற்றே அதன் கீழே இறங்க முடிவு செய்துள்ளார். ஆனால், கிளே பள்ளத்தில் தவறி விழுந்து 50 அடி வரை உள்ளே சென்றுவிட்டார். அங்கு உதவிக்கும் யாரும் இல்லாத நிலையில், மனைவி அகைமியி மிகவும் சிரமப்பட்டு கணவனுக்கு கை கொடுத்து காப்பாற்றியுள்ளார். பின்னர், ஒருவழியாக இருவரும் எரிமலையை விட்டு வெளியே வந்துள்ளனர்.

பள்ளத்தில் விழுந்ததில் கிளேவுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டது. முகத்தாடையில் பலத்த அடிபட்டது. தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கிளே தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியிருந்தார். அதில், “எனக்கு நேர்ந்த சம்பவம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். எனக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். எரிமலை பள்ளத்தில் ஒரு ரோப் உதவியுடன் இறங்கினேன்.

என்னுடைய எடை அதிகமாக இருந்ததால் தவறிவிட்டது. கடவுள் கருணையால் குறைவான காயத்துடன் தப்பித்துவிட்டேன். மிகவும் வலிமை வாய்ந்த என்னுடைய மனைவி, எப்படியோ என்னை பள்ளத்தில் இருந்து காப்பாற்றிவிட்டார். திரும்பி வரும் வழியில் எனக்கு ரத்த வாந்தி வந்தது. மூக்கு உள்ளிட்ட சில இடங்களிலும் ரத்தம் வழிந்தது. தலையை அசைக்கவே முடியவில்லை. அங்கிருந்து எப்படியே அமெரிக்கா மீண்டும் திரும்பிவிட்டோம்”  என்றார்.

அதேபோல், மனைவி அகைமியி தன்னுடைய பேஸ்புக் பதிவில், தன்னை மீண்டும் இப்படியொரு பயணத்திற்கு அழைத்துச் செல்லாதீர்கள் என கிண்டலாக  கூறியிருக்கிறார். (பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.)