பாங்காக்கில் உள்ள காவல்நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டும் நபரை, காவல்துறை அதிகாரி ஒருவர் கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கத்தியுடன் நுழையும் நபர் ஒருவர், அங்குள்ள காவல்துறை அதிகாரிகளை மிரட்டுகிறார். இதை பார்த்த அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த நபரிடம் சமாதானம் பேச முயல்கிறார். அப்போது அங்கிருக்கும் ஒரு மேஜையின் மீது அமர்ந்து கத்தியை தருமாறு அந்த நபரிடம் பொறுமையாக பேசுகிறார் காவல் அதிகாரி.
முதலில் தயங்கும் அந்த நபர் பின்னர் கத்தியை ஒப்படைக்கிறார். இதையடுத்து அந்த நபரை கட்டிப்பிடித்து சமாதானம் செய்யும் அதிகாரி, அவரை அழைத்து சென்று நாற்காலியில் அமர வைக்கிறார். தொடர்ந்து அந்த நபர் அவருக்கு நன்றி சொல்கிறார். அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.