உலகம்

தாய் பாசத்தால் பெண்ணாக மாறிய ஆண்

தாய் பாசத்தால் பெண்ணாக மாறிய ஆண்

webteam

சீனாவில் தன் தாயின் மனநலத்தைக் காக்க ஒரு ஆண், பெண் போன்று ஆடை அணிந்து தோற்றமளிக்கிறார். 20 ஆண்டுகளாக பெண் வேடத்தில் இருக்கும் இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

சீனாவில் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த அந்த நபரின் தங்கை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகள் இறந்த துக்கத்தைத் தாங்காத, அவரின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டார். மனநலம் பாதித்த தாயின் செயல்களும் மாற ஆரம்பித்துள்ளன. தன் தாயின் மனநலத்தை கண்டு மனமுடைந்த அந்த நபர் தனது தங்கை போலவே தோற்றத்தை மாற்றியுள்ளார்.

சீன உடையான சியோங் சம் உடையை அணிந்து, பெண் போலவே தன் சிகையலங்காரத்தை மாற்றி அசல் பெண்ணாகவே மாறிவிட்டார். அதுமட்டுமின்றி தனது தாயை அவர்தான் கவனித்து வருகிறார். எங்கு சென்றாலும் அவரை உடன் அழைத்துச் செல்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இப்படி செய்வதன் மூலம் தன்னுடைய தாய் மகிழ்ச்சி அடைகிறார். இதன் காரணமாகவே தொடர்ந்து இதை செய்து வருகிறேன். தன்னுடைய இந்த தோற்றத்தைப் பார்த்து சிரிக்கும் மக்களைக் கண்டு நான் பயப்படவில்லை. நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதுகுறித்து அவரின் தாயார் கூறுகையில், “என்னுடைய ஒரு மகள் இறந்துவிட்டாள். அப்போதிலிருந்து இவன் என்னுடைய மகளாக மாறிவிட்டான். இதனால் நானும் என் மகனை மகளாகவே ஏற்றுக் கொண்டேன். இவன்தான் என் மகள்” என்று கூறியுள்ளார்.

தாய்க்காக பெண்ணாக மாறிய இவர் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக பேசபட்டு வருகிறார். பலரும் இவரின் தியாகத்தை புகழ்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் #HePosedAsHisDeadSisterFor20Years என்ற ஹஸ்டேக்குடன் இவரின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.