செய்தியாளர் - M.மீரா
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்யப் போவதாக மிரட்டியதாகக் கூறப்படும் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஒரு நபரை வெள்ளை மாளிகைக்கு அருகே ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர். அவரது காரில் ஒரு துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 5ஆம் தேதி வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்றில் இருந்த நபரை பாதுகாப்புப் படையினர் கவனித்துள்ளனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவரை வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரோனி யோர்ட்ரி குவானோப்ரினோஸ் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.
ட்ரம்பைக் கொலை செய்யுமாறு தன்னிடம் சிலர் உத்தரவிட்டதாக அந்த நபர் அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது காரில் ஆயுதங்கள் மட்டுமின்றி, திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்ட வாகனமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆயுதங்கள் வைத்திருந்தது, திருட்டு வாகனத்தைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்காவில் சித்ரவதை சதி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இருவரும் குற்றச்சாட்டுகளை மறுத்து நீதிமன்றத்தில் தங்களை நிரபராதிகள் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களின் வழக்கு விசாரணை 2027 ஜூன் 14ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வெள்ளை மாளிகை அருகே கைது செய்யப்பட்ட வெனிசுலா நபருக்கும் மதுரோவுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக இதுவரை ஆதாரம் எதுவும் வெளியாகவில்லை.