உலகம்

ஒரு நாளைக்கு 100 நாப்கின்கள், 6 லிட்டர் பால்: 9 குழந்தைகள் பிரசவித்த தாய் பகிரும் அனுபவம்

JustinDurai
தனது குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 100 நாப்கின்கள் மாற்றுவதாகவும், 6 லிட்டர் பால் தேவைப்படுவதாகவும் கூறுகிறார் ஹலிமா சிஸ்ஸே.
கடந்த மே மாதம், ஆப்பிரிக்கா நாடான மாலியில், ஹலிமா சிஸ்ஸே என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தன. ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் 7 குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகள் மற்றும் 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 9 குழந்தைகள் பிறந்தன. அமெரிக்காவில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு பெண் 8 குழந்தைகளை பெற்றெடுத்ததே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக இருந்த நிலையில், ஹலிமா சிஸ்ஸே அச்சாதனையை முறியடித்தார்.
ஹலிமா சிஸ்ஸேவுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தது குறித்து தகவல் அறிந்த மாலி நாட்டு அரசு அங்கு மருத்துவக் குழுவினர்களை அனுப்பி தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் 9 குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சவால்கள் குறித்து ஹலிமா சிஸ்ஸே கூறுகையில், ''இந்த காலத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பதே பெரும் கடினம். ஆனால் 9 குழந்தைகளை வளர்ப்பது என்பது கற்பனை செய்ய முடியாதது. அவர்களைப் பராமரிப்பதில் ஈடுபடும் வேலையின் அளவு மலைக்க வைக்கிறது. இதற்காக எனக்கு உதவிவரும் மருத்துவக் குழுவினருக்கும் நிதியுதவி அளித்துவரும் மாலி அரசுக்கும் நான் நன்றி கூறுகிறேன்'' என்கிறார் அவர்.
மேலும் அவர், நாளொன்றுக்கு தனது குழந்தைகளுக்கு 100 நாப்கின்கள் மாற்றுவதாகவும், 6 லிட்டர் பால் தேவைப்படுவதாகவும் கூறுகிறார். குழந்தைகளை பராமரிக்க 24 மணி நேரமும் தனக்கு செவிலியர்களின் உதவி தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
பிரசவ அனுபவம் குறித்து நினைவுகூர்ந்த ஹலிமா சிஸ்ஸே, ''ஒவ்வொரு குழந்தையாக வெளியே வரும்போது, என் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. என்ன நடக்கிறது என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன். முடிவில்லாத பிரசவம் போல் குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துக்கொண்டே இருந்தது. என் சகோதரி என் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். நான் குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறேன்? யார் எனக்கு உதவுவார்கள்? என்பதை நினைத்து அப்போது கவலைப்பட்டேன். இப்போது 5 மாதங்கள் கடந்துவிட்டது. 9 குழந்தைகளும் நலமாக இருக்கிறார்கள்'' என்றார் அவர்.
தனது ஆண் குழந்தைகளுக்கு உமர், எல்ஹாட்ஜி, பா, முகமது எனவும் பெண் குழந்தைகளுக்கு அடாமா, ஓமமு, ஹவா, கதிடியா, ஃபடூமா எனவும் பெயர் சூட்டியிருப்பதாக ஹலிமா சிஸ்ஸே தெரிவித்துள்ளார்.