மாலி மற்றும் புர்கினா பாசோ x page
உலகம்

ட்ரம்ப் உத்தரவுக்குப் பதிலடி.. அமெரிக்கர்களுக்கு பயணத் தடையை விதித்த மாலி, புர்கினா பாசோ!

அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.

Prakash J

அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்கிற கொள்கையில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குடியேற்றக் கட்டுப்பாடுகள், விசா கட்டணத்தில் மாற்றம் என அவற்றில் அடக்கம். குறிப்பாக, அமெரிக்காவிற்கு வேலைக்காக வரும் வெளிநாட்டினரைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தேசிய மற்றும் பொது பாதுகாப்பு, பலவீனமான சரிபார்ப்பு முறைகள், விசா காலாவதி ஆகியவற்றைக் காரணம் காட்டி, மேலும் ஏழு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைவுக் கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டன. அதன்படி, லாவோஸ், சியரா லியோன், புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியாஆகிய நாடுகள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முழுமையான தடையை எதிர்கொள்ளும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கப்பட்ட தடை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

அமெரிக்கர்கள்

அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன. ட்ரம்ப் விதித்த உத்தரவுக்கு பரஸ்பர நடவடிக்கையாக, மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தங்களது நாடுகளுக்குள் அமெரிக்கர்கள் நுழைய அனுமதி இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, மாலியின் வெளியுறவு அமைச்சகம், 'பரஸ்பர கொள்கைகளின் அடிப்படையில் மாலி குடிமக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள அதே தடைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அமெரிக்கக் குடிமக்களுக்கும் பொருந்தும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புர்கினா ஃபஸோவின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்கக் குடிமக்கள் மீது தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இவ்விரு நாடுகளும், ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி அமைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.