சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட 6 நாடுகள் ஏற்கனவே கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது 7வது நாடாக மாலத்தீவுகளும் தூதரக உறவை முறித்து கொள்வதாக அறிவித்துள்ளது.
ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது எனக் கூறி, சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபியா உள்ளிட்ட நாடுகள் கத்தார் நாட்டுடன் இருந்த தூதரக உறவை முறித்துக்கொள்வதாக தெரிவித்தன. இதனால், வான்வழி மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கத்தாருடனான உறவை முறித்து கொள்வதாக மாலத்தீவுகளும் அறிவித்துள்ளது. அதாவது, கத்தாருடன் தூதரக உறவுகள் மட்டுமே துண்டிக்கப்படும் எனவும், வர்த்தக உறவுகள் தொடரும் எனவும் மாலத்தீவுகள் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் இந்த முடிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.