உலகம்

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச

webteam

இலங்கையில் அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நவம்பர் 19இல் இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் மைத்ரிபால சிறிசேன கலைத்தார். இதனை எதிர்த்து, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிபர் சிறிசேனவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. மேலும், பொதுத் தேர்தலுக்கான பணிகளுக்கு தடைவிதித்ததோடு, நாடாளுமன்றம் நடைபெற தடையில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதனையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் ஆ‌லோசனைக் கூட்டம் நடைபெற்றது.‌ இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை ஏற்றுக் கொள்வதாக கூறிய சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து ஆட்சி நடத்தப் போவதில்லை என்றும் கூறினார். 

விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக்‌ கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டாம் என இலங்கை சுதந்திரக் கட்சியை கேட்டுக் கொண்டார். ராஜபக்சவை பிரதமராக நியமித்ததற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு மீதான தீர்ப்புக்கு பிறகு புதிய பிரதமரை நியமிப்‌பது‌ குறித்து முடிவு செய்யப்படும் என சிறிசேன தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. தனது தந்தை ராஜினாமா செய்கிறார் என ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டு தகவலை உறுதி செய்தார். 

இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து நாளை இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன