மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் மகாதீர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி, ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் மூலம் தேசியக் கூட்டணியின் 61 ஆண்டு கால ஆட்சி ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. மலேசியப் பிரதமராக 92 வயது மகாதீர் முகமது இன்று பதவியேற்கிறார்.
மலேசியாவில் எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்று, வரலாறு படைத்திருப்பதை மலேசிய சுனாமி என்று பலரும் வர்ணிக்கின்றனர். 222 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்திற்கு நேற்று காலை தேர்தல் நடத்தப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான பாரிசன் தேசியக் கூட்டணிக்கும், நஜீப்பின் அரசியல் குருவான மகாதீர் முகமது தலைமையிலான பாக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவியது.
மலேசிய தேர்தல் வரலாற்றில் மிக நெருக்கமான போட்டியாக இது அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியமைக்க 112 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், மகாதீர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி அதற்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து 1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு, பாரிசன் நேஷ்னல் தலைமையிலான தேசிய கூட்டணி முதல் முறையாக ஆட்சியை இழந்துள்ளது. தேர்தல் முடிவைத் தொடர்ந்து மலேசியாவில் இன்றும், நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 92 வயது மகாதீர் முகமது இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை பெறவுள்ளார். எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றதை அவர்களின் ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். மகாதீர் முகமது ஏற்கெனவே 1981ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்துள்ளார்.