உலகம்

ஒரு கண் பார்வை பறிபோகிறதா? எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொடூர தாக்குதல் - முழு விவரம்!

ச. முத்துகிருஷ்ணன்

புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க் மாகாணத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது தாக்கப்பட்டார். அடையாளம் தெரியாத இளைஞர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த சல்மான் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

1988 ஆம் ஆண்டில் வெளியான “தி சட்டானிக் வெர்சஸ்” (THE SATANIC VERSUS) நாவலை எழுதிய அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன. இந்த நாவலில் இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபி குறித்தும், இஸ்லாம் நம்பிக்கைகள் குறித்தும் அவதூறுக் கருத்துகள் எழுதப்பட்டிருப்பதாக கூறி, 1989 ஆம் ஆண்டு ஈரானின் தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி, சல்மால் ருஷ்டியைக் கொல்ல உத்தரவு பிறப்பித்து இருந்தார். பல கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் குண்டுவெடிப்புகள் இந்நாவலுக்கு எதிர்வினையாக அமைந்தன. இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் பேச வந்த அவரை அறிமுகம் செய்யும் போது இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

ருஷ்டியை அறிமுகம் செய்து பேசிக்கொண்டிருந்த ஹென்றி ரீஸ்-க்கு(HENRY REESE) இந்த தாக்குதல் சம்பவத்தில் தலையில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்த வந்தவரை பார்த்ததும் ருஷ்டி ஓட முயன்றதாகவும், இருப்பினும் அந்த நபர் தாக்குதலில் கடுமையாக ஈடுபட்டதாகவும் நேரில் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதல் நடத்திய 24 வயதுடைய இளைஞர் ஹடி மாதர் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாக நியூயார்க் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது பென்சில்வேனியாவில் உள்ள மருத்துவமனையில் சல்மான் ருஷ்டி வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது கண்களில் ஒரு கண் முழு பார்வைத்திறனையும் இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் ருஷ்டியின் கல்லீரல் பலத்த சேதத்துக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.