பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஐந்து மாதங்களாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது அங்கு தொற்றுப் பரவல் குறைந்துவரும் நிலையில் உடற்பயிற்சிக்கூடங்கள், சலூன்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
தொடக்கத்தில் பாகிஸ்தான் நகரங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்தது. 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 6,100 உயிரிழப்புகள் நேர்ந்தன. ஜூன் மாதத்தில் இருந்து பாதிப்பின் தீவிரம் மெல்ல குறைந்து வந்தது. கடந்த ஞாயிறன்று அங்கு 539 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. ஆகஸ்ட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் வந்துவிட்டது.
பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் டீக்கடை நடத்தும் ஷேர்கான், " கடவுளுக்கு நன்றி. உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி அளித்துள்ளதால் வியாபாரம் வளரும்" என்று மகிழ்ந்துள்ளார். முகக்கவசம், சானிட்டைசர், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும் என மக்களுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.