உலகம்

ஏழை எளிய மக்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் - போப் பிரான்சிஸ்

கலிலுல்லா

வாடிகன் சிட்டியில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட போப் பிரான்சிஸ், இந்த வண்ண விளக்குகள் மற்றும் அலங்காரங்களை கடந்து ஏழை எளிய மக்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கொரோனா பரவலுக்கு இடையே உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிகா பேராலயத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வழக்கத்தைவிட குறைவான மக்களே அதில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பாசுரங்கள் பாட, போப் பிரான்சிஸும் பாசுரங்கள் பாடி பிரார்த்தனை செய்தார். வெறும் 2 ஆயிரம் பேர் மட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய போப், மனிதர்கள் தன்னலம் பார்ப்பதை விட பிறர் நலம் பார்த்து சேவை புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இயேசுவின் பிறப்பிடமான பெத்லஹெம் நகரில் உள்ள மாங்கெர் சதுக்கத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கூடி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது விழாக்கோலம் பூண்டிருக்கும் பெத்லஹெம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கத்தைவிட களையிழந்து காணப்பட்டது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகிய இருவரும், தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு, குழந்தைகளுடன் உரையாடினார். அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை செல்லும் வழியில், ஜில் பைடனுக்காக வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் அருகே நின்று இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உலகம் முழுவதும் உள்ள கொரோனா பரவல் முடிவுக்கு வர வேண்டும் என பிரான்ஸ் தலைநகர் பிரான்சில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இப்படி பல்வேறு நாடுகளிலும், கொரோனா பரவலுக்கு இடையே வழக்கமான உற்சாகமின்றி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.