அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2 கி.மீ. நீள பீட்சா தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
ஃபோண்டோனா நகரில் உள்ள ஆட்டோ கிளப் ஸ்பீட்வே உணவகத்தைச் சேர்ந்த 12 சமையல் கலைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து இந்த சாதனையை படைத்தனர். இதன்மூலம் உலகின் நீளமான பீட்சா என்ற பெருமையை, இத்தாலியில் கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட 1.93 கி.மீ. நீள பீட்சாவிடமிருந்து அமெரிக்க சமையல் கலைஞர்கள் தட்டிப்பறித்தனர்.
7,808 கிலோ எடை கொண்ட இந்த பீட்சாவைத் தயாரிக்க 8 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் செலவழிக்கப்பட்டது. மனிதநேயம் மற்றும் நட்பைக் கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த பீட்சா தயாரிப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இலவசமாக பரிமாறப்பட்டது. மீதமுள்ள பீட்சா துண்டுகள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், உணவு வங்கிகளுக்கும் அளிக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
உலகின் நீளமான பீட்சா என்ற பெயரில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த பீட்சா இடம்பெற இருக்கிறது.