Kayleigh Castle
Kayleigh Castle Twitter
உலகம்

‘இங்க இருக்கு ப்ரோ சான்பிரான்ஸிஸ்கோ’ - Date செய்ய 5,000 கி.மீ பயணப்பட்ட பெண்.. காத்திருந்த ட்விஸ்ட்!

ஜெனிட்டா ரோஸ்லின்

‘ஃப்ரெண்ட்ஸா இருக்கணுமா, ஃபேஸ்புக் வாங்க... டேட்டிங் பண்ணனுமா, டிண்டர் வாங்க... கல்யாணம் பண்ணனுமா, எங்க மேட்ரிமோனி வாங்க’ என்று, நட்பு, காதல், திருமணம் போன்ற எந்தவொரு புதிய உறவு வேண்டுமென்றாலும் அதற்கு தேவையான உதவிகளை இன்றைய சமூக ஊடகங்கள், செயலிகள் செய்துவிடுகின்றன.

இதில் தவறேதும் இல்லையென்றாலும், ஆபத்துகள் அதிகம் உள்ளது. ஆகவே சமூக ஊடகங்கள் வழியாக கிடைக்கும் உறவு நம்பகத்தன்மையானதாக இருக்குமா என்பதுமட்டுமே நாம் கவனிக்க வேண்டியது. ஒருவேளை அது சரியான உறவில்லை / நம்பிக்கையான உறவில்லை என்றால், அதை நிராகரிக்கும் பக்குவம், உறவுக்குள் நுழைவோருக்கு தேவை.

எவ்வளவு தொலைவுக்கு அந்த உறவுக்காக நாம் சென்றிருந்தாலும் சரி... ‘இது நமக்கு சரிபட்டுவராது’ என தோன்றிவிட்டால் பின்வாங்கிவிட வேண்டும்! அப்படியொரு சம்பவம்தான் இங்கும் நடந்துள்ளது.

Kayleigh Castle (35) என்ற அந்தப் பெண், லண்டனை சேர்ந்தவர். டேட்டிங் செய்வதற்காக, சான்பிரான்ஸிஸ்கோ வரை (சுமார் 5,000 கி.மீ தொலைவு) பயணித்துச் சென்றுள்ளார் இவர்.

அங்கு சென்று அந்த நபரை சந்தித்த போது, அவர் தன்னிடம் பேசாமல் அதிக நேரம் செல்போனிலேயே செலவிட்டதை உணர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 10 நாட்கள் அவர்கள் சான்பிராண்ஸிஸ்கோவில் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். அதில் பெரும்பாலான நேரம் அவர் மொபைலில்தான் இருந்துள்ளார். இதனால் அப்பெண் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.

இதனையடுத்து, “நீங்கள் எனக்கானவர் இல்லை, நாம் நண்பர்களாக பயணிக்கலாம்” எனக்கூறிவிட்டு தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.

டேட்டிங்கிற்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டிச் சென்ற ஒரு பெண், தனக்கானவர் அவர் இல்லை என்பதை உணர்ந்து முதல் மீட்டிங்கிலேயே அவரை நிராகரித்துள்ளது, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘இங்க இருக்கு சார் அமெரிக்கா..’ என காதலுக்காக வாரணம் ஆயிரம் சூர்யா போல போகும் நபர் நீங்கள் என்றால், நல்லதுதான். ஆனால் போனது தவறென தோன்றிவிட்டால் உடனடியாக திருத்திக்கொள்ளுங்கள்! ஏனெனில் திருத்தப்படாத தவறுதான் உண்மையில் தவறு!