உலகம்

மீண்டும் கடன் கேட்ட பாகிஸ்தான்... நிராகரித்த சர்வதேச நாணய நிதியம்! என்ன காரணம் தெரியுமா?

webteam

மீண்டும் கடன் உதவிக்கு விண்ணப்பித்திருந்த பாகிஸ்தான் கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானும், இலங்கையைப் போன்று சமீபகாலமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடன், பெட்ரோலியச் செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் கடும் பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், அத்தியாவசிய உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.262.60 ஆகச் சரிந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, ஏற்கெனவே சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எஃப்) அதிக கடன் பெற்றுள்ள பாகிஸ்தான், மீண்டும் உதவி கேட்டு காத்திருக்கிறது. இதற்காக சி.டி.எம்.பி எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து அதனை ஐ.எம்.எஃப்க்கு அனுப்பியது. ஆனால், அதனை ஆய்வு செய்த அந்த அமைப்பு, அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்காக பாகிஸ்தானில் முகாமிட்டு ஆலோசனையில் ஈடுபட்ட ஐ.எம்.எப். குழு ஒன்று, “இந்த சி.டி.எம்.பி. திட்டத்தில் உண்மையில்லை. அதில் பல்வேறு தவறுகளுக்கான நோக்கங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளது.

மேலும், “அவர்கள் பெறக் கூடிய நிதி உதவி அனைத்தும் பாகிஸ்தானின் ராணுவ உயரதிகாரிகளின் கைக்கே போய்ச் சேருகிறது” எனவும் குறிப்பிட்டு உள்ளது. இதனாலேயே அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, பிரதமர் ஷெபாஸிடம் ஐ.எம்.எஃப், “பாகிஸ்தானில் உடனடியாக மின்கட்டண உயர்வை அமல்படுத்தினால், கூடுதலான மானிய தொகையான 33,500 கோடி பாகிஸ்தான் கரன்சி மதிப்பிலான தொகையை ஈடுகட்ட முடியும். இந்த, மின் கட்டண அதிகரிப்பானது, பணப் பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கும் மின் துறையின் இழப்பை குறைக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

அதற்கு பிரதமர் ஷெபாஸ், ‘பாகிஸ்தானில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு, இதை அமல்படுத்த முடியாது’ எனவும், இது தேர்தலில் எதிர்விளைவை ஏற்படுத்தும் எனவும் சொல்லி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.