சயீப் அல்இஸ்லாம் கடாபி reuters
உலகம்

லிபியா | சர்வாதிகார முன்னாள் அதிபரின் மகன் சுட்டுக் கொலை.. ஆயுதமேந்திய நபர்கள் அத்துமீறல்!

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மர் கடாபியின் மகன் சயீப் அல்இஸ்லாம் கடாபி ஆயுதமேந்திய கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Prakash J

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மர் கடாபியின் மகன் சயீப் அல்இஸ்லாம் கடாபி ஆயுதமேந்திய கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில், அதிபராக இருந்தவர் மும்மர் கடாபி. அந்நாட்டின் சர்வாதிகாரியாக அறியப்பட்ட மும்மர் கடாபி, 2011-ஆம் ஆண்டு, அக்டோபர் 20-ஆம் தேதி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார். இவருடைய மகன் சயீப் அல்இஸ்லாம் கடாபி. தந்தையின் மறைவுக்குப் பிறகு, கடாபியின் அரசியல் வாரிசாக மகன் அல் இஸ்லாம் பார்க்கப்பட்டார். இந்த நிலையில், சயீப் அல் இஸ்லாம் ஆயுதம் தாங்கிய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். மேற்கு லிபியாவில் உள்ள ஜின்டான் நகரத்தில் உள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருப்பினும், கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தந்தைக்குப் பின், வளமிக்க எண்ணெய் உள்ள நாட்டில், செல்வமிக்க நபராக இருந்த அவர், லிபியாவில் நடைபெறும் பேரழிவு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதில் பெரும் பங்காற்றினார்.

சயீப் அல்இஸ்லாம் கடாபி

லிபியாவின் சர்வதேச ஒதுக்கப்பட்ட அந்தஸ்தை உயர்த்தும் முயற்சியில், ஒரு புதிய அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கு அதிக மரியாதை அளிக்க வேண்டும் என்று வாதிட்டு, தன்னை ஒரு சீர்திருத்தவாதியாக நிலைநிறுத்திக் கொள்ளவும் அவர் முயன்றார். 2011ஆம் ஆண்டு லிபியாவில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு நீண்டகால சிறைவாசத்திலிருந்து மீண்ட அவர், அதிபர் தேர்தலில் போட்டியிடவிருந்ததாகவும், அதனால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபியாவில் மும்மர் கடாபியின் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.