லிபியா Pt web
உலகம்

மின்வெட்டால் கொதித்தெழுந்த லிபியா.. தீவிரமடையும் மக்கள் போராட்டம்!!

லிபியாவில், கடந்த சில வாரமாக நீடித்து வரும் மின்வெட்டால் ஆத்திரமடைந்த மக்கள், தலைநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Premkumar S

லிபியாவின் தலைநகர் திரிபோலியில், கடந்த சில வாரங்களாக தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தலைநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் சாலைகளையும் அரசுக் கட்டங்களையும் பொதுமக்கள் முடக்கியிருப்பதால், இந்தப் போராட்டம் பிரதமர் அப்துல் ஹமீத் டிபெய்பா தலைமையிலான அரசுக்கு புதிய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு, திரிபோலியின் மேற்குப் பகுதியான ஜன்சூர், தஜூரா மற்றும் சோக் அல்-ஜுமா பகுதிகளில் மின்வெட்டுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது தலைநகர் முழுவதும் பரவியுள்ளது. மேற்கு திரிபோலி மின் நிலையம் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நீடித்த மின்வெட்டு, அரசின் நிர்வாகத் தோல்வி மற்றும் அடிப்படை சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள அலட்சியத்தைக் கண்டித்து முழக்கமிட்டு வருகின்றனர்.

அதேசமயம், மின்வெட்டு எதிர்ப்பு போராட்டமாகத் தொடங்கிய இந்த இயக்கம், தற்போது பிரதமர் அப்துல் ஹமீத் டிபெய்பா தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டமாக மாறியுள்ளது. அரசு பதவி விலக வேண்டும் என்றும், மின்சாரப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மே 2025 முதல் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை எதிர்த்து தொடங்கிய சூக் அல்-ஜுமா இயக்கம் "அரசாங்கத்தை முழுமையாக முடக்குவதே" தங்களின் நோக்கம் எனத் தெரிவித்திருக்கிறது.

லிபியா

எண்ணெய் வளம் மிகுந்த நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் நிலையற்றத் தன்மை, மோசமான உள்கட்டமைப்பு, மின்சாரத் துறையில் முதலீட்டு பற்றாக்குறை மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக லிபியாவில் மின்விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ள நிலையில், பல மணி நேர மின்வெட்டு மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய போராட்டம் மின்சாரப் பிரச்சினையைத் தாண்டி, அரசின் செயல்பாடுகள் மீதான மக்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.