அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இசை நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
லாஸ்வேகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இசை நிகழ்ச்சி நடந்த மைதானத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருந்தனர். அருகேயிருந்த ஹோட்டலின் 32-ஆவது மாடியில் இருந்து இசை நிகழ்ச்சிக்காக கூடியிருந்தவர்களை நோக்கி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர் பெயர் ஸ்டீபன் பெடாக்(64) என்பது விசாரணையில் தெரியவந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியபின் தன்னைத் தானே அவன் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து லாஸ்வேகாஸுக்கு வரும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதேபோல் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமானங்களும், வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுதொடர்பாக ஐ.எஸ். அமைப்பின் இணையதள செய்தி நிறுவனமான அமாக் வெளியிட்டுள்ள செய்தியில், தாக்குதல் நடத்திய நபர் சில மாதங்களுக்கு முன்பு தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க அரசு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.